சென்னை சுற்றுலா பயணியர் 11 பேர் பஸ் கவிழ்ந்து காயம்
சென்னை சுற்றுலா பயணியர் 11 பேர் பஸ் கவிழ்ந்து காயம்
ADDED : ஆக 14, 2025 03:16 AM

மூணாறு:கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், ராஜாக்காடு, குத்துங்கல் அருகே வட்டகண்ணி பாறை பகுதியில் சுற்றுலா மினி பஸ் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த 11 சுற்றுலா பயணியர் பலத்த காயமடைந்தனர்.
சென்னையை சேர்ந்த ஆறு சிறுவர், சிறுமியர் உட்பட 19 பேர் கொண்ட குழுவினர், மினி பஸ்சில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். ராஜாக்காடு, குத்துங்கல் அருகே வட்ட கண்ணிபாறை பகுதியில் நேற்று மாலை இறக்கத்தில் சென்ற மினி பஸ் வளைவில் திரும்பியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
அதில், மீரா, 70, ஹரீஷ், 45, பாரதி, 45, ரேகா, 35, காயல், 7, டிரைவர் மணிகண்டன், 38, உட்பட 11 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் ராஜாக்காட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் மீராவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பஸ் மின் கம்பத்தில் மோதிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு துறையினர், போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.