ADDED : பிப் 17, 2025 07:02 AM

சண்டிகர்: அமெரிக்காவிலிருந்து மூன்றாம் கட்டமாக, 112 இந்தியர்களுடன், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு அமெரிக்க ராணுவ விமானம் வந்தது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், அந்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் வெளியேற்றப்படுகின்றனர். கடந்த மாதம் ஜனவரி 20ம் தேதி, 104 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். 2வது கட்டமாக, பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு, 119 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து மூன்றாம் கட்டமாக, 112 இந்தியர்களுடன், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு அமெரிக்க ராணுவ விமானம் நேற்றிரவு 10:03 மணிக்கு வந்தது. இதில் பஞ்சாபைச் சேர்ந்த 31 பேர், ஹரியானாவைச் சேர்ந்த 44 பேர் வந்தனர். குஜராத்தில் இருந்து 33 பேரும், உத்தர பிரதேசத்தில் இருந்து இருவரும், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில் இருந்து தலா ஒருவரும் இந்த விமானத்தில் வந்தனர்.
அவர்களது ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் ஒரு சிலரின் உறவினர்களும், விமான நிலையம் வந்து அவர்களை அழைத்து சென்றனர். இதுவரை மூன்று விமானங்களில், 332 இந்தியர்கள் நம் நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.
மொத்தம், 18,000 பேர் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், மீதமுள்ளவர்கள் அடுத்தடுத்த விமானங்களில் வருவர் என தெரிகிறது.

