பெங்களூரில் மர்ம பொருள் வெடித்ததில் 12 வீடுகள் சேதம்; 10 வயது சிறுவன் பலி
பெங்களூரில் மர்ம பொருள் வெடித்ததில் 12 வீடுகள் சேதம்; 10 வயது சிறுவன் பலி
UPDATED : ஆக 16, 2025 01:47 AM
ADDED : ஆக 16, 2025 12:38 AM

ஆடுகோடி: பெங்களூரில் மர்ம பொருள் வெடித்து சிதறியதில், 12 வீடுகள் சேதமடைந்தன. 10 வயது சிறுவன் உயிரிழந்தான்; ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.
கர்நாடகாவின் பெங்களூரு, ஆடுகோடி சின்னய்யனபாளையாவில் ஸ்ரீராம் காலனி உள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகள் அருகருகே நெருக்கமாக இருக்கும். நேற்று காலை 9:00 மணி அளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. 2 கி.மீ., துாரம் வரை கேட்ட சத்தத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஸ்ரீராம் காலனியில், 12 வீடுகள் பயங்கர சேதமடைந்தன. சில வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன.
கவலைக்கிடம் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து ஒரு சிறுவன் உட்பட 10 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி முபாரக், 10, என்ற சிறுவன் உயிரிழந்தான். சரஸ்வதி என்பவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் உட்பட ஒன்பது பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது.
சிலிண்டர் வெடித்தது என்று முதலில் தகவல் வெளியான நிலையில், அதை அப்பகுதி மக்கள் மறுத்தனர். சிலிண்டர் வெடித்திருந்தால் தீ, புகை கிளம்பி இருக்கும். இங்கு அப்படி எதுவும் இல்லை. ஏதோ மர்ம பொருள் வெடித்து இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர்.
இதனால் சம்பவ இடத்திற்கு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், தெற்கு மண்டல டி.சி.பி., சாரா பாத்திமா உள்ளிட்டோரும் சென்றனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தடய அறிவியல் ஆய்வகத்தினரும் சென்றனர். வீடுகளில் இருந்த சிலிண்டர்கள் வெளியே எடுக்கப்பட்டன.
ரூ.5 லட்சம் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின், சித்தராமையா அளித்த பேட்டியில், ''மேலோட்டமாக பார்க்கும்போது சிலிண்டர் வெடித்தது தெரிகிறது.
''உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சேதமடைந்த வீடுகளையும் சரி செய்து கொடுப்போம்,'' என்றார்.
போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் கூறுகையில், ''சிலிண்டர் வெடித்ததா, மர்ம பொருள் வெடித்ததா அல்லது வேறு எதுவும் காரணமா என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது. அதற்குள் எதுவும் சொல்ல முடியாது,'' என்றார்.