ADDED : அக் 15, 2025 11:19 PM
புதுடில்லி: வடகிழக்கு டில்லி ஜோதி நகரில், 122 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தலைநகர் டில்லியில், பசுமைப் பட்டாசுகளைத் தவிர, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், இதர வகை பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, போலீசார் அதிரடி சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்து வருகின்றனர். டில்லி மற்றும் புறநகரில் இதுவரை 15,000 கிலோவுக்கும் அதிகமான பட்டாசுகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், ரகசிய தகவல் அடிப்படையில், வடகிழக்கு டில்லி ஜோதி நகரில் ஒரு மளிகைக் கடையில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். கடைக்குள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 122 கிலோ தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் விவேக் கைது செய்யப்பட்டார். அண்டை மாநிலமான ஹரியானாவில் இருந்து பட்டாசுகளை வாங்கியதாக விவேக் வாக்கு மூலம் அளித்தார்.