பணம் முக்கியமா; பாஸ்வேர்டு எளிதாக இருப்பது முக்கியமா?
பணம் முக்கியமா; பாஸ்வேர்டு எளிதாக இருப்பது முக்கியமா?
ADDED : பிப் 22, 2025 09:02 AM

புதுடில்லி: மொபைல் போன் திருடும் கும்பல், அதனுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடுவது தொடர்ந்து நடக்கிறது. இதற்கு எளிதான பாஸ்வேர்டு வைத்திருப்பதே காரணம் என்கின்றனர் போலீசார்.
பாஸ்வேர்டு என்பது மிகவும் பலமாக இருக்க வேண்டும்; சிறிய மற்றும் பெரிய எழுத்துக்கள், எண்கள், சிறப்பு கேரக்டர்கள் கொண்டதாக பாஸ்வேர்டு இருக்க வேண்டும் என்று வங்கிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. ஆனாலும் நம்மில் பலர், எளிதாக நினைவில் வைத்துக் கொள்வதற்காக, தங்களது பெயர், குடும்பத்தினர் பெயர், பிறந்த தேதி போன்றவற்றை பாஸ்வேர்டு ஆக பயன்படுத்துகின்றனர்.
இன்னும் பலர், 123456 என்று பாஸ்வேர்டு வைத்திருக்கின்றனர். abcdef என்று வைப்போரும் உண்டு. இத்தகைய பலவீனமான பாஸ்வேர்டுகள், திருட்டு கும்பல்களுக்கு பேருதவி செய்கின்றன. சமீபத்தில் டில்லியில் திருடப்பட்ட மொபைல் போன்களில் இருந்து, பணத்தை திருடும் இரண்டு கும்பல்களை போலீசார் கைது செய்தனர்.
ஜார்க்கண்டைச் சேர்ந்த சிறுவர்களுக்கு மொபைல் போன் திருடி வர இந்த கும்பல் பயிற்சி அளித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் இப்படி 12,000 மொபைல் போன்களை திருடி, விற்பனை செய்துள்ளனர். இந்த மொபைல் போன்களில் இருக்கும் சிம் கார்டுகளுக்கு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்கி, வங்கி கணக்கை திறந்து பணத்தை எடுத்து விடுகின்றனர்.
இத்தகைய திருடர்கள், வங்கி கணக்கின் யு.பி.ஐ., பாஸ்வேர்டு எளிதானதாக இருந்தால், யூகத்தில் கண்டுபிடித்து விடுகின்றனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.எனவே, யு.பி.ஐ., பாஸ்வேர்டு என்பது பலமாக இல்லாவிட்டால் பணம் பறி போய்விடும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கின்றனர் போலீசார்.

