ADDED : மார் 01, 2024 11:46 PM

புதுடில்லி: பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், ரேடார்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்குவதற்கான, 39,125 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து ஒப்பந்தங்களில் நம் ராணுவ அமைச்சகம் நேற்று கையெழுத்திட்டது.
புதுடில்லியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடப் பொருட்கள், ரேடார்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள், நேற்று கையெழுத்தாகின.
இந்த நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சக செயலர் கிரிதர் அரமானே உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
நம் ராணுவம், கடற்படை போன்றவற்றில் பயன்படுத்தப்பட உள்ள புதிய தளவாடங்களை வாங்குவதற்கு, 39,125 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நம் கடற்படையின் போர் பிரிவில் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், எம்.ஐ.ஜி. - 29 விமானங்களுக்கான ஆர்.டி. - 33 ஏரோ இஞ்சின்கள், ரேடார்கள் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக வாங்கப்பட உள்ளன.
இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இந்த ஒப்பந்தங்கள் உள்நாட்டு திறன்களை மேலும் வலுப்படுத்தும்.
'அன்னிய செலாவணியை மிச்சப்படுத்தும் மற்றும் எதிர்காலத்தில் வெளிநாட்டு உபகரண உற்பத்திகளை சார்ந்திருப்பதை குறைக்கும். சுயசார்பு இந்தியா திட்டம் வாயிலாக உள்நாட்டிலேயே இந்த தளவாடங்கள் தயாரிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கில் நம் அண்டை நாடான சீனாவுடனான எல்லைப் பிரச்னை நீடித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

