இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து 130 பேர் மாயம்
இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து 130 பேர் மாயம்
ADDED : செப் 13, 2026 08:43 PM
ஜகார்த்தா: மோசமான வானிலை காரணமாக இந்தோனேஷியாவின் ஜாவா கடலில் பயணியர் கப்பல் மூழ்கியதில், 130 பேர் காணாமல் போயுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவாவில் உள்ள சுரபாயாவில் இருந்து தெற்கு கலிமந்தன் மாகாணத்தில் உள்ள பன்ஜார்மாசின் நகருக்கு பயணியர் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இக்கப்பலில் 213 பயணியர், 30 பணியாளர்கள் என, 243 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை மோசமான வானிலை காரணமாக, கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும், கப்பல் ஒரு பக்கமாக சாய்வதாகவும் அதன் மாலுமி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற மீட்பு படையினர் கப்பல் கவிழ்ந்து மூழ்கியதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில், 107 பேர் மீட்கப்பட்டன. உயிரிழந்த, 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. மாயமான, 130 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
