ADDED : நவ 12, 2026 10:04 PM
காத்மாண்டு: ஹிந்துக்கள் சூரிய பகவானை வழிபடும் முக்கியமான பண்டிகையான சாத் பூஜை, வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. நம் நாட்டை போலவே, அண்டை நாடான நேபாளத்திலும் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், நேபாளத்தின் டெராய் மற்றும் சர்லாஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சாத் பூஜைக்காக தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஒரு வேனில் நேற்று சென்று கொண்டிருந்தனர். நேற்று காலை அந்த வேன் மக்வான்பூர் மாவட்டம், பீம்பேடி – காத்மாண்டு மலைப்பாதையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆயிரம் அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
போலீசாரும், மீட்புப் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் வேன் டிரைவர் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
