ADDED : மார் 01, 2024 12:37 AM
டின்டோரி: மத்திய பிரதேசத்தில் பயணியரை ஏற்றி சென்ற வாகனம், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில், 14 பேர் பலியாகினர்; 20 பேர் காயம் அடைந்தனர்.
மத்திய பிரதேசத்தின் டின்டோரி மாவட்டத்தில் உள்ள அம்ஹாய் தேவ்ரி பகுதியை சேர்ந்த சிலர், வாகனம் ஒன்றில் மசூர்குக்ரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.
நேற்று அதிகாலை அங்கிருந்து மீண்டும் அம்ஹாய் தேவ்ரி கிராமத்துக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
அவர்கள் வந்த வாகனம் பத்ஜார் கால்வாய் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஒரு சிறுவன், ஏழு ஆண்கள், ஆறு பெண்கள் என மொத்தம் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 20 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சாஹ்புரா ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இவர்களில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக மாநில அரசு அறிவித்துள்ளது.

