/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கனரக வாகனங்களை ஓட்டும் 14 வயது 'வானம்பாடி'
/
கனரக வாகனங்களை ஓட்டும் 14 வயது 'வானம்பாடி'
UPDATED : ஜன 06, 2025 07:57 AM
ADDED : ஜன 06, 2025 03:49 AM

பெண்கள் வீட்டில் அடைபட்டிருந்த காலம் போய், இன்று நாட்டை ஆளும் காலமே வந்துவிட்டது. இருப்பினும் பெண்களை பலவீனமான பாலினமாக நினைக்கும் பலர் உள்ளனர். இவர்களின் நினைப்பு பொய்த்து போகும் வகையில், கனரக வாகனங்களை ஓட்டி பலத்தை நிரூபித்து உள்ளார், 14 வயது சிறுமி.
மைசூரு என்.ஆர்., மொஹல்லா பகுதியை சேர்ந்தவர் ரிபா தஸ்கின். 14 வயதான இவர் ஓட்டாத வாகனங்களே இல்லை என சொல்லலாம். இவரது தந்தை தாஜூதின் 'பைக் ரேசர்'. அப்பாவிற்கு பைக்கின் மீது இருந்த ஆர்வத்தை பார்த்த, ரிபா தஸ்கின் தனது தந்தை போல ஒரு பைக் ரேசர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு உள்ளார்.
7 வயதில்
அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு, முயற்சிகள் செய்ய துவங்கினார். இதற்கு அவரது தந்தையின் உதவியை நாடினார். அவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, வாகனங்கள் ஓட்ட கற்று கொடுக்க ஆரம்பித்தார். தனது 7 வது வயதிலேயே டூ வீலர் ஓட்ட கற்றுக் கொண்டார். இத்துடன் நிற்காமல், ஆட்டோ, கார் போன்றவையும் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டார்.
இவரது திறமையை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் அசந்தனர். இதன் மூலம் தனது 7வது வயதிலேயே இந்தியன் புக் ஆப் ரிக்கார்டில் இடம் பிடித்தார். கார், பைக், ஆட்டோ ஓட்டினால் மட்டும் போதுமா; டிராக்டர், லாரி, பஸ் என எல்லா வாகனங்களையும் ஒரு கை பார்த்தார். அப்பா பைக் ரேசர் என்பதாலோ, இவருக்கும் வாகனங்கள் ஓட்டுவது மிக எளிமையாக இருந்து இருந்தது.
இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று, ரோடு ரோலரை, ஒற்றை கையால் ஓட்டும் அளவிற்கு திறமையை வளர்த்து கொண்டார். பல விருதுகளை வாங்கி குவிக்க ஆரம்பித்தார். வீட்டு அலமாரி முழுதும் விருதுகளால் நிரம்பி உள்ளன. மொத்தம் 25 வகையான வாகனங்களை ஓட்டி அசத்துகிறார்.
ராணுவம்
ரிபா தஸ்கின் கூறுகையில், ''லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களை ஆண்கள் ஓட்டும் போது, பெண்களால் ஓட்ட முடியாதா. இதை நிரூபித்துக் காட்டவே வாகனங்களை ஓட்ட கற்று கொண்டேன். எதிர்காலத்தில் நமது ராணுவத்தில் பணிபுரிவதற்காக காத்திருக்கிறேன்,'' என்றார்.
சாதிக்க வயசு முக்கியமில்லை; தைரியமும், திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதனையாளர் ஆகலாம் என இவரது வாழ்க்கை உணர்த்துகிறது.
- நமது நிருபர் -

