'ஜன்தன்' திட்டத்தில் முடங்கிய 14.28 கோடி வங்கி கணக்குகள்
'ஜன்தன்' திட்டத்தில் முடங்கிய 14.28 கோடி வங்கி கணக்குகள்
ADDED : அக் 22, 2025 06:01 AM

புதுடில்லி: 'ஜன்தன்' திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகளில் துவங்கப்பட்ட கணக்குகளில், 14.28 கோடி வங்கிக் கணக்குகள் செயல்படாத நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2014ல் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கி சேவை எளிதாக கிடைப்பதை உறுதி செய்ய, 'ஜன்தன்' என்ற திட்டத்தை துவங்கினார். இத்திட்டத்தின்படி, பொதுத் துறை வங்கிகளில், பூஜ்ய இருப்புத் தொகை உடைய வங்கிக் கணக்குகளை துவங்க முடியும்.
கடந்த செப்., நிலவரப்படி, ஜன்தன் திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகளில், 54.55 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இவற்றில், 14.28 கோடி வங்கிக் கணக்குகள், அதாவது, 26 சதவீத கணக்குகள் செயல்படாத நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
அதிகபட்சமாக, பாங்க் ஆப் இந்தியாவில், 33 சதவீதம்; யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில், 32 சதவீத வங்கிக் கணக்குகள் செயல்படாத நிலையில் உள்ளன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், 2024 செப்டம்பரில், 19 சதவீதமாக இருந்த செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, கடந்த செப்டம்பரில், 25 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
பொதுத் துறை வங்கிகளில், ஜன்தன் வங்கிக் கணக்குகளுக் கும், ரூபே கார்டு வழங்கலுக்கும் இடையேயான இடைவெளி, 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்படி, மொத்த 54.55 கோடி வங்கிக் கணக்குகளில், 37.53 கோடி வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே ரூபே கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. 17.02 கோடி வங்கிக் கணக்குகளுக்கு ரூபே கார்டுகள் வழங்கப்படவில்லை.