/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசியல் கட்சிகள் தாராளம் பட்டாசு விற்பனை 'டல்'
/
அரசியல் கட்சிகள் தாராளம் பட்டாசு விற்பனை 'டல்'
ADDED : அக் 22, 2025 06:00 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசியல் கட்சியினரின் தாராளத்ததால், பட்டாசு விற்பனை கடந்த ஆண்டைவிட சரிந்துள்ளது.
ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு புதுச்சேரியில் உள்ள பட்டாசு கடைகளில் விற்பனை 'களை' கட்டும். அதனால் தனியார் பட்டாசு கடைகள் மட்டுமின்றி கான்பெட், அமுதசுரபி உள்ளிட்ட சில கூட்டுறவு நிறுவனங்களும் சில்லறை பட்டாசு விற்பனையில் ஈடுபட்டு வந்தன. இதனால், கடந்த சில ஆண்டுகளாக பல கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை அதிகரித்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் அதேபோல் விற்பனை இருக்கும் என்று ஏராளமான தனியார் பட்டாசு கடைகள், அரசு கூட்டுறவு நிறுவன கடைகள் பட்டாசுகளை சிவகாசியிலிருந்து வாங்கி குவித்து வைத்திருந்தனர்.
ஆனால், இந்த பட்டாசு விற்பனைக்கு வேட்டு வைக்கும் வகையில், அரசியல் கட்சியினரின் செயல்பாடுகள் அமைந்துவிட்டன. அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டசபை தேர்தலுக்காக தங்கள் தொகுதியில் உள்ளவர்களை கவர்வதற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சுயேச்சையாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் போட்டி போட்டு, ஸ்வீட் பாக்ஸ், பெரிய சைஸ் கிப்ட் பாக்ஸ் பட்டாசுகளை வீடு, வீடாக சென்று வழங்கி, தங்கள் செல்வாக்கை காண்பித்தனர். இதனால், சில தொகுதிகளில் ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு, மூன்று பட்டாசு பாக்ஸ்கள் கிடைத்தன. இது மட்டுமின்றி அரசு துறையில் உள்ள கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு அந்தந்த சங்கங்கள் சார்பில், இலவச ஸ்வீட், பட்டாசு பாக்ஸ்கள் வழங்கப்பட்டன.
இலவச பட்டாசுகளால், பெரும்பாலானோர் கடைகளில் வாங்குவதை தவிர்த்து விட்டனர். இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு புதுச்சேரியில் விற்பனைக்கு பட்டாசுகளை குவித்து வைத்திருந்த தனியார் பட்டாசு கடைகளில் கடந்த ஆண்டை விட குறைவாகவே விற்பனை நடந்துள்ளது.
இதில் கிராமப்புற கடைகளில் விற்பனை நிலவரம் கவலை அளித்து விட்டது என, கடைக்காரர்கள் புலம்புகின்றனர். அரசியல் கட்சியினரின் தாராள மனப்பான்மையால் பட்டாசு கடைக்காரர்கள் தான் சிக்கிக் கொண்டனர்.