நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்ததில் பெட்ரோல் பிடிக்க திரண்ட 147 பேர் பலி
நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்ததில் பெட்ரோல் பிடிக்க திரண்ட 147 பேர் பலி
ADDED : அக் 17, 2024 01:52 AM

அபுஜா,ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியிலிருந்து பெட்ரோல் பிடிக்க மக்கள் திரண்ட போது, டேங்கர் வெடித்ததில் 147 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியா நாட்டில் சரக்கு போக்குவரத்துக்கு என்று ரயில்வே கட்டமைப்பு இல்லாத காரணத்தால், பெட்ரோல் உள்ளிட்டவை டேங்கர் லாரிகள் வாயிலாக சாலை வழியே கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், இங்கு டேங்கர் லாரிகள் விபத்துக்குள்ளாவது அதிகம்.
நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில், பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி நேற்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதில் இருந்து கசிந்த பெட்ரோலை பிடிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் லாரியின் முன் திரண்டனர். அப்போது ஏற்பட்ட திடீர் தீயில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில், 147 பேர் உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் கடந்த 13ம் தேதி பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, எதிரே வந்த மற்றொரு லாரியுடன் மோதி வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியா சாலை பாதுகாப்பு அமைப்பு, தங்கள் நாட்டில் ஆண்டுக்கு 1,000க்கும் மேற்பட்ட டேங்கர் லாரி விபத்துகள் நடப்பதாகவும், இதில் 500க்கும் மேற்பட்டோர் இறப்பதாகவும் கூறியுள்ளது.