10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் இந்திய நீதித்துறை அறிக்கை தகவல்
10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் இந்திய நீதித்துறை அறிக்கை தகவல்
ADDED : ஏப் 16, 2025 01:45 AM

புதுடில்லி : கடந்த, 1987ல் சட்ட கமிஷன் அளித்த பரிந்துரை யின் படி, 10 லட்சம் மக்கள் தொகைக்கு, 50 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது, 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என, இந்திய நீதித்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
டாடா அறக்கட்டளை முயற்சியில், 2019ல் இருந்து நீதித்துறை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
தற்போது, மேலும் பல அமைப்புகள் ஒத்துழைப்புடன், 2025ம் ஆண்டுக்கான இந்திய நீதித்துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
கடந்த, 1987ல் சட்ட கமிஷன் பரிந்துரையின்படி, 10 லட்சம் மக்கள் தொகைக்கு, 50 நீதிபதிகள் இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது நாடு முழுதும், 140 கோடி மக்கள் தொகைக்கு, 21,285 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். அதாவது, 10 லட்சம் மக்கள் தொகைக்கு, 15 நீதிபதிகளே உள்ளனர்.
தற்போதைய நிலையில் உயர் நீதிமன்றங்களில், நிர்ணயிக்கப்பட்ட பதவி இடங்களில், 33 சதவீதம் காலியாக உள்ளன. இது, 2025ல், 21 சதவீதமாக இருக்கும். இதனால், உயர் நீதிமன்றங்களில் பணிச்சுமை அதிகமாக உள்ளது.
தேசிய அளவில் மாவட்ட நீதிமன்றங்களில், ஒரு நீதிபதிக்கான அதிகபட்ச பணிச்சுமை, 2,200 வழக்குகள். ஆனால், அலகாபாத், மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களில், ஒரு நீதிபதியின் பணிச்சுமை, 15,000 ஆக உள்ளது.
மாவட்ட நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை, 2017ல், 30 சதவீதம் இருந்தது, தற்போது, 38.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் உயர் நீதிமன்றங்களில், இந்த எண்ணிக்கை, 11.4 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், பெண் நீதிபதிகள் எண்ணிக்கை, 6 சதவீதமாக உள்ளது. 25 உயர் நீதிமன்றங்களில், ஒன்றில் மட்டுமே, பெண் தலைமை நீதிபதி உள்ளார்.
கர்நாடகா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுராவைத் தவிர மற்ற அனைத்து உயர் நீதிமன்றங்களிலும், இரண்டில் ஒரு வழக்கு, மூன்று ஆண்டுக்கு முந்தையது. மாவட்ட நீதிமன்றங்களில், பெரும்பாலான மாநிலங்களில், 40 சதவீத வழக்குகள், மூன்று ஆண்டுக்கு மேற்பட்டவையாக உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.