பெண்களுக்கு மாதம் ரூ.1,500 ஹிமாச்சலில் அமலுக்கு வந்தது
பெண்களுக்கு மாதம் ரூ.1,500 ஹிமாச்சலில் அமலுக்கு வந்தது
ADDED : மார் 15, 2024 12:15 AM

சிம்லா, ஹிமாச்சல பிரதேசத்தில், 18 - 59 வயது பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான அறிவிப்பை மாநில அரசு நேற்று வெளியிட்டது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சட்டசபை தேர்தலின் போது பிரசாரம் செய்த காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் அங்குள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது.
எதிர்க்கட்சிகள் கேள்வி
அந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக சுக்விந்தர் சுகு பொறுப்பேற்றார்.
பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட உதவித் தொகை வழங்கப்படாமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், இது தொடர்பான அறிவிப்பை மாநில அரசு நேற்று வெளியிட்டது.
முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:
மாநிலத்தில் உள்ள 18 - 59 வயது பெண்களுக்கு, 'இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சம்மன் நிதி யோஜனா திட்டம்' கீழ் மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும்.
ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்பெற உள்ள இந்த திட்டத்திற்காக, முதற்கட்டமாக 800 கோடி ரூபாய் செலவிடப்படும்.
வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறுவோர் இந்த திட்டத்தின் வாயிலாக பயனடைய முடியாது.
அதிருப்தி
மத்திய, மாநில அரசுகளின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பில் உள்ள பணியாளர்கள், பஞ்சாயத்து ராஜில் பணிபுரியும் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்சிங் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து பெண்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் பெரும்பாலான பிரிவுகள் நீக்கப்பட்டது, ஹிமாச்சலில் உள்ள பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

