1,750 கிலோ பட்டாசு பறிமுதல் டில்லியில் 7 பேர் பிடிபட்டனர்
1,750 கிலோ பட்டாசு பறிமுதல் டில்லியில் 7 பேர் பிடிபட்டனர்
ADDED : அக் 06, 2025 02:08 AM
புதுடில்லி:தீபாவளி பண்டிகை நெருங்கு வதை முன்னிட்டு, போலீசார் நடத்தி வரும் அதிரடி சோதனையில் நேற்று, 1,751 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் டில்லியில் பருவமழை நிறைவடைந்தவுடன் அக்டோபரில் இருந்து ஜனவரி மாதம் வரை காற்று மாசு அதிகரிக்கும், எனவே, காற்று மாசை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் டில்லியில் பட்டாசு விற்க மற்றும் வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆனால், தசரா பண்டிகை மற்றும் தீபாவளியை முன்னிட்டு பலர் அண்டை மாநிலங்களில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து டில்லியில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.
அதை த் தடுக்க டில்லி மாநகரப் போலீசாரும் அதிரடி சோதனை நடத்தி பட்டாசுகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
துவாரகா, ரோஹிணி, உத்தம் நகர், சாஸ்திரி நகர், முகுந்த்பூர் மற்றும் ஷாஹ்தாரா ஆகிய இடங்களில் போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில், சந்தர் கந்த்,36, ரிஷிராஜ், 37, ராகுல் சாகர்,34, சோனு, 30, விஷால் சர்மா, 34 உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு, 1,645 கிலோ பட்டாசுகள் மற்றும் ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல, வடகிழக்கு டில்லி மண்டோலியில் ஒரு மளிகைக் கடையில் 106 கிலோ பட்டாசுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரி மையாளர் ஆகாஷ் குப்தா,24, கைது செய்யப்பட்டார்.