ஹிந்து அல்லாத 18 ஊழியர்கள் திருப்பதியில் பணியிட மாற்றம்
ஹிந்து அல்லாத 18 ஊழியர்கள் திருப்பதியில் பணியிட மாற்றம்
ADDED : பிப் 06, 2025 12:29 AM
திருப்பதி: ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில், திருமலை ஏழுமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலை, டி.டி.டி., எனப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேவஸ்தான கூட்டத்தில், கோவிலில் பணிபுரியும் ஹிந்து அல்லாத ஊழியர்களை இடமாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தேவஸ்தானம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
ஏழுமலையான் கோவிலில் பணிபுரிந்த ஹிந்து அல்லாத 18 ஊழியர்கள், ஹிந்து மத நடைமுறைகளை பின்பற்றாதது தெரிய வந்துள்ளது. அவர்களின் செயல், கோவிலின் கவுரவத்தையும், புனிதத்தையும் இழிவுபடுத்துகிறது.
இதனால், அந்த 18 பேரும் கோவில் பணியில் இருந்து இட மாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்கள் வேண்டுமென்றால் விருப்ப ஓய்வு பெறலாம் அல்லது கோவில் அல்லாத பிற அரசு துறைகளில் பணிபுரியலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட 18 பேரில், டி.டி.டி., கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள், தொழில்நுட்பம், மருத்துவம், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.