2 ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வலை கோலாரில் பாடம் கற்பிக்க காங்., பிளான்
2 ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வலை கோலாரில் பாடம் கற்பிக்க காங்., பிளான்
ADDED : பிப் 10, 2024 06:21 AM

கோலார்: பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு ஷாக் கொடுக்க காங்கிரஸ் தயாராகிறது. கோலார் மாவட்டத்தை சேர்ந்த, ம.ஜ.த.,வின் இரண்டு எம்.எல்.ஏ.,க்களுக்கு குறிவைத்துள்ளது.
லோக்சபா தேர்தலில், ஹூப்பள்ளி - தார்வாட் தொகுதியில், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை களமிறக்க, காங்கிரஸ் திட்டமிட்டது.
இதையறிந்த மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உட்பட சில தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு ஜெகதீஷ் ஷெட்டரை, பா.ஜ.,வுக்கு திரும்ப அழைத்து வந்தனர். இதனால் காங்கிரஸ் எரிச்சல் அடைந்துள்ளது.
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு, 'ஷாக்' கொடுக்கும் நோக்கில், ம.ஜ.த.,வின் இரண்டு எம்.எல்.ஏ.,க்களுக்கு, காங்கிரஸ் வலை விரித்துள்ளது.
இதுதொடர்பாக, கோலார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்தனுார் மஞ்சுநாத், நேற்று கூறியதாவது:
ம.ஜ.த.,வின் சீனிவாசப்பூர் எம்.எல்.ஏ., வெங்கடசிவா ரெட்டி, முல்பாகல் எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத் ஆகியோர் விரைவில் காங்கிரசில் இணைய உள்ளனர்.
இருவரும், துணை முதல்வர் சிவகுமாருடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தி உள்ளனர். அவர்களை சேர்த்துக் கொள்ளலாமா என்று என்னிடம் கேட்டார். நானும் சம்மதம் தெரிவித்துள்ளேன்.
லோக்சபா தேர்தலுக்கு முன்னரே, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, காங்கிரசில் இணைந்தால் நல்லது. அதன் பின், நடக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அவர்களே சீட் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் எதுவும் பேசவில்லை.