ஏ.டி.எம்.,மில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 ஊழியர் பலி!: ரூ.93 லட்சத்தை கொள்ளை அடித்து தப்பிய கும்பல்
ஏ.டி.எம்.,மில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 ஊழியர் பலி!: ரூ.93 லட்சத்தை கொள்ளை அடித்து தப்பிய கும்பல்
ADDED : ஜன 17, 2025 07:32 AM

பீதர்: பீதரில் ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்ப வந்த ஊழியர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, 93 லட்சம் ரூபாயுடன், கொள்ளையர்கள் தப்பியோடினர். பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பீதர் நகரின் பிரதான சிவாஜி சதுக்கம் பகுதி, நேற்று காலை வழக்கம் போல், பரபரப்பாக இருந்தது. காலை 11:00 மணி அளவில், இங்குள்ள எஸ்.பி.ஐ., பிரதான கிளைக்கு பணம் நிரப்ப, சி.எம்.எஸ்., என்ற தனியார் ஏஜென்சியின் ஜீப் வந்தது. பணப்பெட்டியை இறக்கும் போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், ஊழியர்கள் மீது மிளகாய் பொடியை துாவினர்.
பைக்கில் வந்த ஹெல்மெட் அணிந்த நபரும், முக கவசம் அணிந்த நபரும், பணப்பெட்டியை பறிக்க முயற்சித்தனர். இதனால், சி.எம்.எஸ்., ஏஜென்சி ஊழியர் கிரி வெங்கடேஷ், சிவகுமார் ஆகியோர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், கிரி வெங்கடேஷ், அதே இடத்தில் உயிரிழந்தார். மற்றொரு ஊழியர் சிவகுமார், படுகாயம் அடைந்தார். பைக்கில் வந்த கொள்ளையர்கள், 93 லட்சம் ரூபாய் அடங்கிய பணப்பெட்டியுடன் தப்பினர். அங்கிருந்த மக்கள், அவர்கள் மீது கற்களை வீசி தடுக்க முயற்சித்தனர். ஆயினும், அவர்கள் தப்பி விட்டனர்.
படுகாயம் அடைந்த சிவகுமார், பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜீப் ஓட்டுனர் ராஜசேகர், காயமின்றி உயிர் தப்பினார். பணம் டிபாசிட் செய்ய வந்தவர்களுக்கு பாதுகாப்பாக, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் யாருடன் உடன் வரவில்லை. இச்சம்பவத்தை பார்க்கும் போது, திட்டமிட்டு கொள்ளை அடித்திருப்பது தெரிகிறது.
பணப்பெட்டியுடன் வந்த வாகனத்தை, கொள்ளையர்கள், தங்கள் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துள்ளனர். வங்கி ஏ.டி.எம்., முன் நின்றவுடன், இரு சக்கர வாகனத்தை, ஜீப்பின் முன் நிறுத்துகின்றனர்.
ஜீப்பின் பின்பக்க கதவு திறந்தபோது, ஹெல்மெட் அணிந்திருந்த நபர், பைக்கை தயார் நிலையில் வைத்திருந்தார். முக கவசம் அணிந்திருந்த கொள்ளையர், பணத்தை கொடுக்கும்படி வற்புறுத்தி உள்ளார். கொடுக்க மறுத்ததால், கிரி வெங்கடேஷ், சிவகுமாரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
தயாராக இருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி, முக கவசம் அணிந்த நபர் ஏற முயற்சித்தார். ஆனால், பணப்பெட்டி கனமாக இருந்ததால், அவரால் பெட்டியுடன் ஏற முடியவில்லை. பின், வாகனத்தின் முன்பக்கம் வைத்த போது, அதன் கனத்தை தாங்க முடியாமல், வாகனம் சாய்ந்தது. பின், மீண்டும் பெட்டியை முன்பக்கம் வைத்து கொண்டு, அங்கிருந்து தப்பியோடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, 'ஏஜென்சி ஊழியர்கள் மீது முதலில் மிளகாய் பொடியை துாவினர். அதன் பின்னர் தான் துப்பாக்கியால் சுட்டனர்' என தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் எஸ்.பி., பிரதீப் குன்டே, கூடுதல் எஸ்.பி., சந்திரகாந்த் பூஜாரி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின் எஸ்.பி., பிரதீப் குன்டே கூறியதாவது:
எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,மில் பணத்தை ஊழியர்கள் நிரப்ப வந்தபோது, பைக்கில் வந்த இருவர், துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்தவரும், மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பீதரின் அருகில் தெலுங்கானா மாநிலம் அமைந்துள்ளதால், அங்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது. பணத்துடன் தலைமறைவான கொள்ளையர்களை கண்டுபிடிக்க ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:
ஏ.டி.எம்.,களில் பணம் டிபாசிட் செய்ய செல்பவர்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே, வழிமுறைகள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏ.டி.எம்.,மில் துப்பாக்கி ஏந்தி செக்யூரிட்டி இருந்தாரா என்று தெரியவில்லை. இது ஏ.டி.எம்., பணத்துக்காக நடத்தப்பட்ட கொலையா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
... புல் அவுட் ...
இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈஸ்வர் கன்ட்ரே,
வனத்துறை மற்றும் பீதர் மாவட்ட பொறுப்பு அமைச்சர்.
***