முறையான உற்பத்தி இல்லாவிட்டால் மருந்து நிறுவனங்கள் மூடப்படும்; மத்திய அரசு எச்சரிக்கை
முறையான உற்பத்தி இல்லாவிட்டால் மருந்து நிறுவனங்கள் மூடப்படும்; மத்திய அரசு எச்சரிக்கை
ADDED : நவ 11, 2025 12:23 AM

புதுடில்லி: 'அனைத்து இருமல் மருந்து உற்பத்தியாளர்களும், வரும் ஜன., 1ம் தேதிக்குள், நல்ல உற்பத்தி நடைமுறைகளுக்கு இணங்காவிட்டால் மருந்து நிறுவனங்கள் மூடப்படும்' என, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.
நம் நாட்டில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள், அமெரிக்கா, ஆப்ரிக்கா, பிரிட்டன் உட்பட பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த இருமல் மருந்துகளை குடித்து மேற்கு ஆப்ரிக்காவின் காம்பியா, மத்திய ஆப்ரிக்காவின் கேமரூன், மத்திய ஆசியாவின் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இந்திய இருமல் மருந்துகளின் தரம் குறித்து உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியது. பல்வேறு நாடுகளும் இது குறித்து விமர்சனங்களை முன்வைத்தன. இதையடுத்து, மருத்து தயாரிப்பு மற்றும் அதன் தரம் குறித்த விதிமுறைகளில், நம் நாட்டிலும், சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஜூலையில் திருத்தம் மேற்கொண்டது.
திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, ஜி.எம்.பி., எனப்படும் நல்ல உற்பத்தி நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அனைத்து மருந்து தயாரிப்பாளர்களும், கடுமையான தரக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மூலப்பொருட்களின் தரமறிதல், உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளுடன் ஒத்துபோகக் கூடிய சிறந்த ஆவணங்களை உறுதி செய்ய வேண்டும் என, அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
நம் நாட்டில் செயல்படும், 5,308 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில், 3,838 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை ஏற்று அமல்படுத்தின.
மீதமுள்ள, 1,470 நிறுவனங்கள், புதிய நெறிமுறைகளை அமல்படுத்த அவகாசம் கோரின. இந்நிலையில், திருத்தப்பட்ட நெறிமுறைகளை வரும் ஜன., 1ம் தேதிக்குள் அமல்படுத்தாத மருந்து நிறுவனங்கள் மூடப்படும் என, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

