விமான பயிற்சியின் போது விபத்து :கனடாவில் 2 இந்தியர்கள் பலி
விமான பயிற்சியின் போது விபத்து :கனடாவில் 2 இந்தியர்கள் பலி
UPDATED : செப் 21, 2026 11:06 PM
ADDED : செப் 21, 2026 08:03 PM
ஒட்டாவா:கனடாவில், விமானப் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில், நம் நாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.
வட அமெரிக்க நாடான கனடாவில், 'ஹார்வ்ஸ் ஏர்' என்ற விமானப் பயிற்சி பள்ளி உள்ளது. அந்த பள்ளியின், 'செஸ்னா 172' ரக சிறிய பயிற்சி விமானத்தை வாடகைக்கு எடுத்த தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார், புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகியோர், ரெஜினா பகுதியிலிருந்து ஸ்டெய்ன்பாக் நோக்கி சென்றனர். ஆனால், சில மணி நேரங்களிலேயே விமானம் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. தீவிர தேடுதலுக்கு பின், சச்கட்சுவான் மாகாணத்தில் உள்ள கிஸ்பி பகுதிக்கு அருகில் விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விபத்தில் மாணவர்கள் இருவரும் உயிரிழந்ததாக, கனடாவில் உள்ள நம் துாதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர தேவையான அனைத்து உதவிகளையும் செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
