ADDED : ஏப் 13, 2025 05:32 AM
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் சோகம் பகுதியில், அரசு கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவ - மாணவியர் 27 பேர் சுற்றுலாவுக்கு நேற்று பஸ்சில் சென்றனர். ஹந்த்வாரா பகுதியில் பஸ் சென்றபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழு உதவியுடன் பஸ்சில் சிக்கிய மாணவ - மாணவியரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், ஒரு மாணவி, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும், அபாய கட்டத்தில் இருந்த இரண்டு மாணவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

