ADDED : செப் 22, 2024 11:21 PM
ஹாவேரி: ரோடு ரோலர் மோதியதில், கூலி தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
ஹாவேரி, பேடகியின் அளலகேரி கிராமத்தில் வசித்தவர்கள் சித்து, 24, பிரீத்தம், 24; கூலி வேலை செய்கின்றனர். உறவினர்களான இவர்கள் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடக்கும் இடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து, பிழைப்பு நடத்துகின்றனர்.
இவர்களுடன், மேலும் சில தொழிலாளர்களை மோடேபென்னுார் அருகில், தேசிய நெடுஞ்சாலை - 4ல் நடக்கும் சீரமைப்பு பணிகளுக்கு, ஒப்பந்ததாரர் அழைத்து வந்தார்.
இவர்கள் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரோடு ரோலரை ஓட்டுனர், குறுக்கும், நெடுக்குமாக ஓட்டி வந்து இவர்கள் மீது மோதினார். இதில் சித்து, பிரீத்தம் உயிரிழந்தனர்.
'தங்களுக்கு நியாயம் வேண்டும்' என, இறந்தவர்களின் குடும்பத்தினர், கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த, பேடகி போலீசார், மக்களை சமாதானம் செய்தனர்.