மழைக்கால கூட்டத்தொடரில் 20 மணி நேரம் விவாதம்: சபாநாயகர்
மழைக்கால கூட்டத்தொடரில் 20 மணி நேரம் விவாதம்: சபாநாயகர்
ADDED : ஆக 09, 2025 10:41 PM

புதுடில்லி:“டில்லி சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில், 20 மணி நேரம் விவாதம் நடந்துள்ளது; மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன,” என, சபாநாயகர் விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.
இதுகுறித்து, டில்லி சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறியதாவது:
சட்டசபை மழைக்காலக் கூட்டத் தொடர், 4ம் தேதி துவங்கி, 8ம் தேதி நிறைவடைந்தது.
ஐந்து நாட்கள் நடந்த கூட்டத்தில், பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை மசோதா மற்றும் இரண்டு ஜி.எஸ்.டி., திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத் தொடரில், 19 மணி நேரம் 40 நிமிடங்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதம் நடந்துள்ளது.
விதிமுறை எண் 280ன் கீழ், 171 சிறப்புக் குறிப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில், 62 அறிவிப்புகள் சவையில் எழுப்பப்பட்டன.
இந்தப் பிரச்னைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, 30 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில், விதிமுறை 54ன் கீழ் இரண்டு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
கடந்த, 5ம் தேதி விதிமுறை 271ன் கீழ், சட்டசபை வளாகத்தில், முந்தைய ஆம் ஆத்மி அரசால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 'பான்சிஹர்' எனப்படும் மரண தண்டனை அறை இருந்ததாக திறந்து வைக்கப்பட்டது குறித்து சபையில் உண்மை நிலவரம் தெரிவிக்கப்பட்டது.
வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், இந்த அறையை 2022ம் ஆண்டு அப்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்துள்ளார். ஆனால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இது, சிற்றுண்டி கூடமாக இருந்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டசபை வளாகத்தில், ஆவணம் இல்லாமல், இந்த அறையை திறக்க, 1.04 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2023 - 20-24ம் ஆண்டுக்கான டில்லி அரசின் நிதி மற்றும் ஒதுக்கீட்டுக் கணக்குகள், மாநில நிதி மற்றும் கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களின் நலன் குறித்த சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின், நான்கு அறிக்கைகளை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்.
விவாதத்துக்குப் பின், அந்த அறிக்கைகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பொதுக் கணக்குக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.