ADDED : ஜன 03, 2026 03:10 AM
கார்கோன்: மத்திய பிரதேசத்தின் நர்மதா நதிக்கரையில், 200 கிளிகள் மர்மமான முறையில் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ம.பி.,யின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள பத்வா பகுதியில் நர்மதா நதியின் மேல் பாலம் உள்ளது. இதில், கடந்த நான்கு நாட்களாக கிளிகள் இறந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், 200 கிளிகளின் உடல்களை மீட்டனர்.
உணவின் நச்சுத்தன்மையால் கிளிகள் இறந்ததாக மாவட்ட வனத்துறை அதிகாரி டோனி சர்மா தெரிவித்தார்.
பறவை காய்ச்சல் பாதிப்பால் கிளிகள் இறக்கவில்லை என, பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாலம் அருகே பறவைகளுக்கு உணவு வழங்க தடை விதிக்கப்பட்டது.
மேலும், கிளிகளின் உடல் உறுப்பு மாதிரிகள் ஜபல்பூருக்கு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையே பிரேத பரிசோதனை செய்த டாக்டர் மனிஷா சவுகான் கூறுகையில், “கிளிகளின் உடலில் அரிசி மற்றும் கூழாங்கற்கள் இருந்தன. உணவில் ஏற்பட்ட விஷத்தன்மையே இறப்புக்கு காரணம்.
''மருந்து தெளிக்கப்பட்ட வயல்களில் பயிர்களை மேய்ந்ததாலும், நர்மதா நதி நீரை குடித்ததாலும் கிளிகள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது,” என்றார்.

