அமெரிக்கர்களை ஏமாற்றிய போலி நிறுவன ஊழியர்கள் 21 பேர் பெங்களூருவில் கைது
அமெரிக்கர்களை ஏமாற்றிய போலி நிறுவன ஊழியர்கள் 21 பேர் பெங்களூருவில் கைது
ADDED : நவ 15, 2025 09:29 PM

பெங்களூரு: அமெரிக்கர்களை ஏமாற்றிய போலி நிறுவன ஊழியர்கள் 21 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட்பீல்டில் போலி சாப்ட்வேர் நிறுவனம் ஒன்று, பலரை ஏமாற்றிவருவதாக கிடைத்த தகவலின் படி, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு,ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீசார் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்திய சோதனையில், 21 பேர் கைது கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
ஒயிட்பீல்டில் 4,500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள மஸ்க் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2025 இல் தொடங்கப்பட்டது. இங்குள்ள ஊழியர்கள்,மைக்ரோசாப்ட் ஆதரவு தொழில்நுட்ப வல்லுநர்கள் போல் காட்டிக் கொண்டு வெளிநாட்டு பிரஜைகளை ஏமாற்றி உள்ளனர். விசாரணை முடிவில் மோசடியில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட கணினி அமைப்புகள், டிஜிட்டல் சாதனங்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள். மேலும் தலைமறைவான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு டிஜிபி அலுவலகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

