வீடியோ பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த வாலிபர் கைது
வீடியோ பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த வாலிபர் கைது
ADDED : நவ 15, 2025 09:15 PM

போபால்: மத்திய பிரதேசத்தில் வீடியோ பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த 21 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது; கடந்த நவ.,14ம் தேதி கருப்பு டி--சர்ட் அணிந்த நபர், 500 ரூபாய் கள்ள நோட்டுடன் நிஜாமுதின் பகுதியில் உலா வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த நபர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சிப்பதாக சொல்லப்பட்டது.
பிறகு, போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் போபாலின் கரோந்த் பகுதியைச் சேர்ந்த விவேக் யாதவ்,21, என தெரிய வந்தது. அவரிடம் இருந்து 23 ரூ.500 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விவேக் யாதவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடத்தினோம். அப்போது, அவரது செல்போனை ஆராய்ந்ததில், கள்ள நோட்டுகளை எப்படி அச்சிடுவது என்பது குறித்து பல்வேறு வீடியோக்கள் இருந்தன. இந்த வீடியோக்களை பார்த்து தான், அசல் நோட்டுகளைப் போலவே கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளார்.
மேலும், முன்பு பிரின்டிங் பிரஸில் வேலை செய்த அனுபவத்தினால், அச்சு அசலாக ரூபாய் நோட்டுகளை உருவாக்க முடிந்ததாக கூறியுள்ளார். ரூபாய் நோட்டுகளைப் போன்ற அடர்த்தி கொண்ட காகிதத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
கடைகளில் சிறிய பொருளை வாங்கி விட்டு, இந்த ரூ.500 நோட்டை கொடுத்து, ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை சில்லறையாக பெற்று வந்துள்ளார். இதுவரையில், 5 முதல் 6 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2.25 லட்சம் மதிப்பிலான 428 போலி ரூ.500 நோட்டுகள் கண்டுக்கப்பட்டுள்ளன, இவ்வாறு கூறினர்.
இதேபோல, கேரளாவில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் போலீசாரிடம் 5 பேர் சிக்கினர். அவர்களில் 2 பேர் கல்லூரி மாணவர்கள் ஆவர்.
இதுபற்றிய விவரம் வருமாறு; கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகள் வினியோகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரோந்து பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.இந் நிலையில், பெரோக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் கண்காணிப்பில் இறங்கினர். அவர்களின் விசாரணையில், 5 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 57 போலி கள்ள 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் இருவர் இளங்கலை கல்லூரி மாணவர்கள்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது; எங்கள் கண்காணிப்பில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழங்குவதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தோம். தொடர் விசாரணையில், ராமநாட்டுகாரா, கொண்டோட்டி, அரிகோடு, முக்கம் ஆகிய பகுதியில் சோதனை நடத்தினோம். ராமநாட்டுகாரா பகுதியில் வசிக்கும் டிஜின் என்பவர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 57 கள்ள 500 ரூபாய் நோட்டுகள், கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட 35 தாள்கள் கிடைத்தது.
இது தொடர்பாக, டிஜின் என்பவரை கைது செய்துள்ளோம். அவருடன் கொண்டோட்டியைச் சேர்ந்த அதுல் கிருஷ்ணா, அரிகோட்டைச் சேர்ந்த அம்ஜத்ஷா, அப்னான், முக்கம் பகுதியைச் சேர்ந்த சரங் ஆகியோரை பிடித்துள்ளோம். இவர்களில் அம்ஜத்ஷா மற்றும் அப்னான் இருவரும் இளம்கலை கல்லூரி மாணவர்கள். இவ்வாறு போலீசார் கூறியுள்ளனர்.

