சீன நிறுவனங்கள் துணையுடன் கடன் மோசடி நிதி நிறுவனத்துக்கு ரூ.2,146 கோடி அபராதம்
சீன நிறுவனங்கள் துணையுடன் கடன் மோசடி நிதி நிறுவனத்துக்கு ரூ.2,146 கோடி அபராதம்
ADDED : அக் 12, 2024 01:30 AM
புதுடில்லி, சீன நிறுவனங்களுடன் இணைந்து, கடன் செயலியை செயல்படுத்தியதில், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், 'பி.சி., பைனான்சியல் சர்வீசஸ்' நிறுவனத்துக்கு, அமலாக்கத்துறை 2,146 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நார்வே மற்றும் சீனாவின் சில நிறுவனங்களுடன் இணைந்து, 'கேஷ்பீன்' என்ற கடன் செயலியை நடத்தி வந்த வங்கி சாரா நிதி நிறுவனமான பி.சி., பைனான்ஸ் சர்வீசஸ் மீது, மோசடி புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, 'பெமா' எனப்படும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளை மீறியதாக, அந்நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை 2,146 கோடி ரூபாயை அபராதம் விதித்தது.
கடன் செயலி தொடர்பாக, இந்திய வங்கி சாரா நிதி நிறுவனம் ஒன்றுக்கு இவ்வளவு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.
குற்றம்சாட்டப்பட்ட நிதி நிறுவனத்தின் ஒட்டு மொத்த கட்டுப்பாடும் சீன உரிமையாளர்கள் வசம் இருந்தது, பெமா சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
மேலும், மென்பொருள் உரிமங்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதி என்ற பெயரில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, பி.சி. பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் வாயிலாக, 430 கோடி ரூபாய் அனுப்பப்பட்டதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் 252.36 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, கடந்த 7ம் தேதி அமலாக்கத்துறையினர் முடக்கினர்.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட நிறுவனம் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதில்களை கவனமாக ஆய்வு செய்ததில், நிதி நிறுவனம் விதிமுறைகளை மீறியது தெளிவாக நிரூபணமானது என அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு 2,146 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் பி.சி.பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் மீது 43 எப்.ஐ.ஆர்.,கள் பதிவாகிஉள்ளன.
விசாரணை தொடர்பான வழக்கின் தகவல் அறிக்கையை அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது.
எப்.ஐ.ஆர்.,களில் 362 கடன் செயலிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
கடனாளிகளின் தகவல்கள் 'டெலி காலர்'களுக்கு வழங்கப்பட்டு, தவணை தவறுவோர் மிரட்டப்பட்டனர். இந்நிறுவனம் ரூ.173 கோடி அன்னிய நேரடி முதலீடு பெற்றதும் தெரிய வந்துள்ளது.