தர்மஸ்தலா வழக்கு பின்னணியில் சசிகாந்த் செந்தில்? தமிழக காங்கிரஸ் எம்.பி., மீது பா.ஜ., குற்றச்சாட்டு
தர்மஸ்தலா வழக்கு பின்னணியில் சசிகாந்த் செந்தில்? தமிழக காங்கிரஸ் எம்.பி., மீது பா.ஜ., குற்றச்சாட்டு
UPDATED : ஆக 20, 2025 10:39 AM
ADDED : ஆக 20, 2025 03:49 AM

பெங்களூரு: ''தர்மஸ்தலா வழக்கின் பின்னணியில், தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் சதி உள்ளது,'' என்ற குற்றச்சாட்டை, கர்நாடக பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் ஓடும் நேத்ராவதி ஆற்றங்கரையில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக, கோவிலின் முன்னாள் ஊழியர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார்.
இது தொடர்பாக, எஸ்.ஐ.டி., விசாரணை நடக்கிறது. இந்நிலையில், பெண்கள் உடல்களை சட்டவிரோதமாக புதைத்ததாக கூறும்படி ஒரு கும்பல் என்னை தொடர்பு கொண்டது. அந்த கும்பல் கூறியபடி நடந்து கொண்டதாக, புகார்தாரர் பல்டி அடித்துள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
தர்மஸ்தலா வழக்கை எஸ்.ஐ.டி.,யிடம் கொடுக்க, முதல்வர் சித்தராமையாவுக்கு துளியும் விருப்பம் இல்லை. ஆனால், அவருக்கு நிறைய இடங்களில் இருந்து அழுத்தம் வந்தது. எனக்கு தெரிந்து காங்கிரஸ் மேலிடம் தான், அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
இதற்கு, தமிழக காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் தான் காரணம். காங்கிரஸ் மேலிடத்தின் வலதுகரமாக உள்ள அவர் தான், எஸ்.ஐ.டி., அமைக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி, காங்கிரஸ் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து உள்ளார்.
தர்மஸ்தலா வழக்கில், 'மாஸ்க்' அணிந்து இருக்கும் புகார்தாரருக்கும் , சசிகாந்த் செந்திலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. புகார்தாரர் கடந்த, 11 ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து உள்ளார். தர்மஸ்தலா வழக்கில் சசிகாந்த் செந்திலின் சதி உள்ளது.
மஞ்சுநாதா கோவிலுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலை பற்றி அவதுாறு பரப்புவதன் மூலம், பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு டீம் சதி செய்கிறது. பள்ளம் தோண்டிய இடங்களில் எதுவும் கிடைக்காததால், என்ன செய்வது என தெரியாமல் காங்., அரசு முழிக்கிறது.
இந்த வழக்கில் சதி இருப்பதாக, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார். சதி செய்தவர்களை அரசு உடனடியாக கைது செய்து, நம் மாநிலத்தின், மஞ்சுநாதா கோவில் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும். சசிகாந்த் செந்தில் மீது நான் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க தயாராக உள்ளேன்.
இந்த வழக்கை சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரித்தால் தான் உண்மை வெளிவரும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில், சட்ட போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.