வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தி கேரள அரசு அதிரடி
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தி கேரள அரசு அதிரடி
ADDED : அக் 11, 2025 02:30 AM

திருவனந்தபுரம் : கேரளாவில், மனித - விலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக, மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்து, அம்மாநில அரசு சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில், மனித - விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
பயிர்களை காட்டுப்பன்றிகள் அழிப்பது, காட்டு யானைகள் மனிதர்களை கொல்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் - 1972ல் திருத்தம் செய்து, கேரள வனவிலங்கு பாதுகாப்பு திருத்த சட்டம் - 2025 என்ற மசோதாவை, கேரள சட்டசபையில் அம்மாநில அரசு நிறைவேற்றி உள்ளது.
இந்த திருத்த மசோதா, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், சட்டமாக அமலுக்கு வரும்.
வயநாடு மறுசீரமைப்புக்கு
நிதி கேட்ட பினராயி
வயநாடு நிலச்சரிவு தொடர்பான மறு சீரமைப்பு பணிகளுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியான, 2,221 கோடி ரூபாயை உடனடியாக வழங்கும்படி பிரதமரிடம் பினராயி கோரிக்கை வைத்தார். மேலும், கேரளாவின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் விவாதித்தார்.