வரிக்குறைப்பால் சொகுசு கார் கேட்ட மகனின் மண்டையை உடைத்த தந்தை
வரிக்குறைப்பால் சொகுசு கார் கேட்ட மகனின் மண்டையை உடைத்த தந்தை
ADDED : அக் 11, 2025 02:05 AM
திருவனந்தபுரம்:ஜி.எஸ்.டி., குறைப்பால் சொகுசு கார் கேட்டு தகராறு செய்த மகனின் மண்டையை கம்பியால் அடித்து உடைத்த தந்தை மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வஞ்சியூர் பகுதியைச் சேர்ந்த வினயானந்த் மகன் ஹரிதிக் 28. வேலைக்கு செல்லாத இவர் வீட்டில் பெற்றோரிடம் தகராறு செய்வார். சில மாதங்களுக்கு முன் தனக்கு விலை உயர்ந்த பைக் வாங்க கேட்டுள்ளார். அதை வினயானந்த் வாங்கிக் கொடுத்தார்.
இந்நிலையில் ஜி.எஸ்.டி., குறைப்பால் கார் விலை குறைந்துள்ளது. எனவே தனக்கு சொகுசு கார் வாங்கித் தர வேண்டும் என்று கூறி தந்தையிடம் கேட்டு தகராறு ஈடுபட்டுள்ளார்.
இதற்கு வினயானந்த் மறுத்ததால் ஆத்திரமடைந்த ஹரிதிக் தந்தையை சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த வினயானந்த் வீட்டிலிருந்த கடப்பாரையால் மகனின் தலையில் அடித்தார்.
பலத்த காயம் அடைந்த ஹரிதிக், உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வினயானந்த் தலைமறைவாகிவிட்டார். வஞ்சியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.