இந்திய குடியுரிமையை விட்டுத் தந்து வெளிநாட்டில் குடியேறிய 2.16 லட்சம் பேர்: இவர்களில் சிலர் கோடீஸ்வரர்கள்
இந்திய குடியுரிமையை விட்டுத் தந்து வெளிநாட்டில் குடியேறிய 2.16 லட்சம் பேர்: இவர்களில் சிலர் கோடீஸ்வரர்கள்
ADDED : ஆக 02, 2024 04:06 PM

புதுடில்லி: ‛‛ 2023 ம் ஆண்டு 2.16 லட்சம் இந்தியர்கள் இந்திய குடியுரிமையை விட்டுத் தந்து விட்டு வெளிநாடுகளுக்கு சென்றனர்'', என ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
கவலை
ராஜ்யசபாவில் ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சத்தா பேசும் போது, ஏராளமானோர் இந்திய குடியுரிமையை விட்டுக் கொடுப்பது பற்றியும், இந்திய குடியுரிமை விண்ணப்பங்கள் குறைந்தளவே ஏற்கப்படுவது குறித்தும் கவலை தெரிவித்தார். இதற்கான காரணங்கள் குறித்து அரசு விசாரணை நடத்தியதா என்பது கேள்வி எழுப்பினார்.
பதில்
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: 2023ம் ஆண்டு 2,16,219 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை விட்டுத் தந்துவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.
இந்த எண்ணிக்கை 2022ம் ஆண்டில் 2,25,620 ஆகவும்
2021 ல் 1,63, 370 ஆகவும்
2020 ல் 85,256 ஆகவும்
2019 ல் 1,44,017 ஆகவும் இருந்தது.
குடியுரிமை பெறுவது அல்லது விட்டுக் கொடுப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். வெற்றிக்கரமான மற்றும் செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளியினர் இந்தியாவின் சொத்தாக கருதப்படுகின்றனர். அவர்களின் அறிவையும், நிபுணத்துவத்தையும் பகிர்வதை ஊக்கப்படுத்தி, அந்த பலன்களை முழுமையாக பயன்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு உள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.
வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் கோடீஸ்வரர்கள்
ஹென்லே நிறுவனத்தின் அறிக்கைப்படி இந்தாண்டு 4,300 கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என கூறப்பட்டு உள்ளது. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 5,100 ஆக இருந்தது. தாய்நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு செல்லும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது.
இந்தியாவில் இருந்து வெளியேறுபவர்களின் விருப்பமான நாடாக யுஏஇ உள்ளது. இந்த நாட்டில் பூஜியம் வருமான வரி கொள்கை, கோல்டன் விசா திட்டங்கள், ஆடம்பர வாழ்க்கை ஆகியவை அமல்படுத்தப்படுகிறது. இந்தாண்டில் மட்டும் 6,700 கோடீஸ்வரர்கள் இங்கு வந்து குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.