21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு: பிரதமர் மோடி
21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு: பிரதமர் மோடி
UPDATED : அக் 26, 2025 09:16 PM
ADDED : அக் 26, 2025 05:22 PM

புதுடில்லி: '' 21ம் நூற்றாண்டு நமது நூற்றாண்டு. இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு,'' என ஆசியான் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பேசினார்.
மலேஷியாவில் ஆசியான் மாநாடு நடக்கிறது. அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இம்மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: எனது ஆசியான் குடும்பத்துடன் இணைவதற்கான வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது. ஆசியான் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு வாழ்த்துகள். இந்த அமைப்பில் புதிதாக இணைந்துள்ள திமோர் நாட்டை வரவேற்கிறேன். தாய்லாந்து அரசியின் மரணத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பு நாடுகளில் தான் வசிக்கின்றனர். நாம் புவியியலை மட்டும் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆழமான வரலாற்று சிறப்புமிக்க உறவுகள் மற்றும் பகிரப்பட்ட மாண்புகளை பகிர்ந்துங கொள்கிறோம். நாம் வர்த்தக உறவை மட்டும் பகிரவில்லை. கலாசார உறவுகளையும் பகிர்கிறோம். இந்தியாவின் தெற்கு நோக்கிய கொள்கையில் ஆசியான் அமைப்பு முக்கிய தூணாக திகழ்கிறது.
ஆசியான் அமைப்பின் மையத்தன்மையையும், இந்தோ பசுபிக் பிராந்தியம் குறித்த ஆசியான் அமைப்பின் கண்ணோட்டத்தையும் இந்தியா ஆதரிக்கிறது. நிச்சயமற்ற இந்த காலங்களில் இந்தியா ஆசியான் அமைப்பின் கூட்டாண்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையாக நமது வலுவான கூட்டாண்மை உருவாகி வருகிறது.
இந்தாண்டு ஆசியான் அமைப்பின் மையக்கருத்தாக' உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை' இருக்கிறது. இந்தக் கருத்து, நமது பகிரப்பட்ட முயற்சிகளான டிஜிட்டல் உள்ளடக்கம் அல்லது தற்போதைய சவால்களுக்கு மத்தியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மீள் விநியோக சங்கிலிகளை உறுதி செய்கிறது. இதனை இந்தியா ஆதரிக்கிறது. இந்த திசையில் முன்னேறி செல்வதில் ஊக்குவிக்கிறது. இந்தியா எப்போதும் ஆசியான் கூட்டாளிகளுடன் துணை நின்று வருகிறது.
மனிதநேய உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பணி, கடலோர பாதுகாப்பு மற்றும் கடல், கடல்சார் வளங்கள் அடிப்படையிலான பொருளாதாரம் ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. 2026 ம் ஆண்டை ஆசியான் - இந்தியா கடலோர பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஆண்டு என அறிவித்துள்ளோம்.
இத்துடன், கல்வி, சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுவாக ஊக்குவித்து வருகிறோம். 21ம் நூற்றாண்டு நமது நூற்றாண்டு. இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு. ஆசியான் அமைப்பின் சமூக தொலைநோக்கு கொள்கை 2045 மற்றும் வளர்ந்த பாரதம் 2047 ஆகியவற்றின் நோக்கம், முழு மனித குலத்துக்கான பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

