தேர்தலில் போட்டியிடாத 22 தமிழக அரசியல் கட்சிகள் நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தேர்தலில் போட்டியிடாத 22 தமிழக அரசியல் கட்சிகள் நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை
ADDED : ஆக 09, 2025 04:10 PM

புதுடில்லி: தமிழகத்தில் 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 22 அரசியல் கட்சிகள், பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2019 முதல் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 22 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளில் 334 கட்சிகள் தேர்தல் ஆணைய பட்டியலில் பதிவு செய்தும், 2019 ஆண்டு முதல் ஒரு தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த கட்சிகளுக்கு எங்கும் அலுவலகங்களும் இல்லை. அவ்வாறு உள்ள இந்த கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6 தேசிய கட்சிகளும் 67 மாநில கட்சிகளும் உள்ளன.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், தேர்தல் ஆணையம் இதுபோன்ற 345 கட்சிகள் மீது நடவடிக்கைகளைத் தொடங்கி, இறுதியாக 334 கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன.
நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29ஏ இன் விதிகளின் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விதியின் கீழ், ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட எந்தவொரு சங்கமும் வரி விலக்குகள் உள்ளிட்ட சில சலுகைகளைப் பெறுகிறது.
பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இந்த கட்சிகள், இந்த உத்தரவை எதிர்த்து 30 நாட்களில் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.