ADDED : ஜன 23, 2025 01:55 AM

பாலக்காடு:மலப்புரம் அருகே, லாரியில் கடத்தி வந்த, 22,235 லிட்டர் எரிசாராயத்தை பாலக்காடு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு போதை தடுப்பு பிரிவு போலீசார், மலப்புரம் மாவட்டம் திரூர்ரங்காடி கொளப்புரம் பகுதியில், நேற்று காலை வாகன சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியை, சோதனையிட்ட போது, 35 லிட்டர் கொள்ளளவு உள்ள, 635 கேன்களில், 22,235 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து, லாரி டிரைவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த அன்பழகன், 50, கிளீனர் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மொய்தீன், 48, ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், எரிசாராயத்தை கர்நாடகாவில் இருந்து எர்ணாகுளம் மாவட்டத்திற்கு கடத்திச் செல்வது தெரிந்தது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.