சத்தீஸ்கரில் 3 தம்பதி உட்பட 23 நக்சல்கள் போலீசில் சரண்
சத்தீஸ்கரில் 3 தம்பதி உட்பட 23 நக்சல்கள் போலீசில் சரண்
ADDED : ஜூலை 13, 2025 03:36 AM

சுக்மா:சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் மூன்று தம்பதி உட்பட, 1.18 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்ட 23 நக்சல்கள் போலீசில் சரணடைந்தனர்.
சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் அபுஜ்மாத் பகுதியில் நேற்று முன்தினம், 22 நக்சல்கள் சரண் அடைந்தனர். இதை தொடர்ந்து சுக்மா மாவட்டத்தில், மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் முன், 23 நக்சல்கள் நேற்று சரண் அடைந்தனர்.
இவர்கள், தீவிர மாவோயிஸ்ட் அமைப்பான மக்கள் விடுதலை கொரில்லா படையை சேர்ந்தவர்கள்.
இவர்களில் போடியம் பூமா, 35, ரமேஷ், 23, கவாசி மாசா, 35, மேட்கம் ஹுங்கா, 23, நுப்போ காங்கி, 28, புனேம் தேவே, 30, பராஸ்கி பாண்டே, 22, மாத்வி ஜோகா, 20, நுப்போ லாச்சு, 25, போடியம் சுக்ராம், 24, துதி பீமா ஆகியோர் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால், தலா 8 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர்.
இது தவிர, மேலும் நான்கு பேர் தலைக்கு தலா 5 லட்சம் ரூபாயும், ஒருவருக்கு 3 லட்சம் ரூபாயும், 7 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் என மொத்தம் 1.18 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர்.
சரணடைந்தவர்களில் 11 பேர் மாவோயிஸ்ட் மூத்த நிர்வாகிகள்; மூன்று தம்பதியர்; ஒன்பது பேர் பெண்கள்.
இது குறித்து சுக்மா போலீஸ் எஸ்.பி., கிரண் சவான் கூறுகையில், “மாவோயிஸ்ட்டின் வெற்று சித்தாந்தத்தால் வெறுப்படைந்து, 23 நக்சல்களும் சரண் அடைந்து உள்ளனர்.
“இவர்களின் மறுவாழ்வுக்காக அரசு தலா 50,000 ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளது. இதுதவிர நக்சல்களின் மறுவாழ்வு கொள்கைப்படி மற்ற சலுகைகளும் வழங்கப்படும்,” என்றார்.

