பிரபல கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 6 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை
பிரபல கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 6 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை
UPDATED : டிச 12, 2025 08:53 PM
ADDED : டிச 12, 2025 08:42 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 குற்றவாளிகளுக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
2017ம் ஆண்டு பிப். 17ம் தேதி பிரபல மலையாள நடிகை ஒருவர், காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை கடத்திய ஒரு கும்பல், பாலியல் வன்கொடுமை, செய்து அதை செல்போனில் படம் பிடித்தது. கேரளாவில் மட்டுமல்ல, அம்மாநில திரையுலகமான மல்லுவுட்டிலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப்பை (வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்) நிரபராதி என்று எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
8 ஆண்டுகாலம் நடந்த இந்த வழக்கில் முதல் 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு இன்று (டிச.12)தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறி இருந்தது.
அதன்படி, இன்று தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. குற்றவாளிகள் 6 பேருக்கும் கூட்டு பாலியல் வன்கொடுமை, குற்றவியல் சதி ஆகிய குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் விதித்துள்ளது.
மேலும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 50000 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அபராத தொகையை செலுத்தாவிட்டால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, தண்டனை விவரம் பெற்றவர்கள் விவரம்;
சுனில் (எ) பல்சர் சுனி
மார்ட்டின் ஆண்டனி
மணிகண்டன்
விஜேஷ்
சலீம்
பிரதீப்
பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பாலியல் வன்கொடுமை காட்சிகள் அடங்கிய பென்டிரைவ்வை விசாரணை அதிகாரியின் பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தமது தீர்ப்பில் கூறி உள்ளது.

