24 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி: ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ்
24 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி: ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ்
UPDATED : ஜூன் 01, 2024 12:33 PM
ADDED : மே 31, 2024 04:25 PM

புதுடில்லி: டில்லி - சான்பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம் 24 மணி நேரம் தாமதமானது. மேலும், விமானத்தில் ஏசி செயல்படாததால் பயணிகள் மயக்கமடைந்தனர். இது தொடர்பாக பல புகார்கள் எழுந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் வழங்கி உள்ளது.
தலைநகர் டில்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று (மே 30) மாலை 3:30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் கிளம்ப இருந்தது. சுமார் 200 பயணிகள் விமானத்தில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால், 6 மணி நேரம் கடந்தும் விமானம் கிளம்பவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் கிளம்பாது என அறிவிக்கப்பட்டது. மேலும், இரவு 8:00 மணிக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு 7:20 மணியளவில் அந்த விமானத்தில், பயணிகள் சென்ற நிலையில், விமானத்தில் ஏசி செயல்படவில்லை. அதில், வயதானவர்கள் , குழந்தைகள் இருந்ததால் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. சிலர் மயக்கம் அடைந்தனர்.
இதனையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு விமானத்தில் இருந்து வெளியே வந்த அவர்கள் விமான நிலையத்தின் வாயில் திறக்கப்படும் வரை ஓடுதளத்தில் காத்திருந்தனர். பிறகு விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விமானத்திலும், விமான நிலையத்திலும் தங்களுக்கு கிடைத்த மோசமான அனுபவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில், பயணிகள் புகைப்படங்களுடன் பகிர துவங்கினர்.
இதனையடுத்து டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், விமானம் தாமதம், கடுமையான வெப்பத்தில் பயணிகள் காக்க வைக்கப்பட்டது, விமானத்தில் ஏசி செயல்படாதது குறித்து கேள்வி எழுப்பி உள்ளதுடன், இது குறித்து 3 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.