மண்டல சீசனில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் டிச.26 மண்டல பூஜை ஏற்பாடுகள் தீவிரம்
மண்டல சீசனில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் டிச.26 மண்டல பூஜை ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : டிச 20, 2024 01:48 AM
சபரிமலை:நடப்பு மண்டல காலத்தில் சபரிமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர்.
நவ., 16ல் மண்டல காலம் துவங்கியது. கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் நடத்தி திரும்பினர். பிரசாதத்துக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.
கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தினசரி 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் நடத்தினர். இதனால் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சரங்குத்தியில் இருந்து பக்தர்கள் கட்டம் கட்டமாக அனுப்பப்பட்டனர். டிச., 18 இரவு 10:00 மணி வரை 26 லட்சத்து 8,349 பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். இது நேற்று 27 லட்சத்தை கடந்தது.
மண்டல பூஜைக்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சபரிமலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. டிச., 22 காலை 6:00 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி புறப்பட்டு 25 மதியம் பம்பை வந்தடைகிறது. இங்கு கணபதி கோவில் அருகே தரிசனத்திற்காக வைக்கப்படும் தங்க அங்கி பின்னர் தலை சுமையாக சன்னிதானம் கொண்டுவரப்படும். அன்று மாலை 6:30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும்.
டிச.,26 -ல் மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3:30க்கு தொடங்கும் நெய்யபிஷேகம் காலை 11:00 மணியுடன் நிறைவுறும். மதியம் 12:00 - க்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடைபெறும். அதைத்தொடர்ந்து நடை அடைக்கப்படும். மாலை 4:00 க்கு நடை திறந்து இரவு 10:00 அல்லது 11:00 க்கு நடை அடைக்கப்படும்.
அதன்பின் மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச.,30 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.