சீன நிறுவனத்திற்காக இந்தியர்களிடம் மோசடி: 2,500 கி.மீ., தூரம் விரட்டி சென்று குற்றவாளியை கைது செய்த போலீஸ்
சீன நிறுவனத்திற்காக இந்தியர்களிடம் மோசடி: 2,500 கி.மீ., தூரம் விரட்டி சென்று குற்றவாளியை கைது செய்த போலீஸ்
ADDED : டிச 08, 2024 10:04 PM

புதுடில்லி: இந்தியர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று சைபர் மோசடியில் ஈடுபட வைத்த கும்பலின் தலைவனை 2,500 கி.மீ., தூரம் விரட்டிச் சென்று டில்லி போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டில் வேலை என ஆசைவார்த்தை கூறி இந்தியர்களை அழைத்துச் சென்று, அடிமைகளாக மாற்றி சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட வைக்கும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. அப்படி கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் தவித்தவர்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டு உள்ளது.
அந்த வகையில், கடந்த மே மாதம், டில்லியைச் சேர்ந்த நரேஷ் என்பவர், போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், வேலை தேடி அலைந்த போது, அலி இண்டர்நேசன் சர்வீஸ் என்ற நிறுவனம், தாய்லாந்தில் வேலை உள்ளது எனக்கூறி அழைத்துச் சென்றது. அங்கு சென்றதும் எனது பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டு சீன நிறுவனத்தில் பணியாற்ற நிர்பந்தம் செய்யப்பட்டேன். அந்த நிறுவனம் இந்தியர்களிடம் பண மோசடியில் ஈடுபட என்னை கொடுமைப்படுத்தியது எனக்கூறியிருந்தார்.
இந்த வழக்கு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன் விசாரணையில், கோல்டன் முக்கோண பிராந்தியம் என அழைக்கப்படும் தாய்லாந்து, லாவோஸ் மற்றும் மியான்மர் எல்லைப்பகுதிகள் சந்திக்கும் இடத்திற்கு, இந்தியர்களை அழைத்துச் செல்வதும், அங்கு சீன நிறுவனத்திற்கு பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுவதும் தெரிந்தது. மேலும், இந்தியர்கள் மட்டுமல்லாமல் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களிடமும் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியர்களை ஏமாற்றி அழைத்துச் செல்லும் கும்பலின் தலைவனாக கம்ரன் ஹைதர் என்ற ஜைதி செயல்பட்டு உள்ளான். இக்கும்பலில், மன்சூர் ஆலம், சாகில், ஆஷிஷ் என்ற அகில், பவன் யாதவ் என்ற அப்சல் ஆகியோர் சேர்ந்துள்ளனர். இக்கும்பல் இந்தியர்களை மோசமாக நடத்தி சித்ரவதை செய்துள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி உள்ளனர்.
கும்பலின் தலைவன் கம்ரன் ஹைதர் என்ற ஜைதியை டில்லி போலீசார் தேடி வந்தனர். அவனை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2 லட்சம் பரிசு தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ம.பி., மஹாராஷ்டிரா , சத்தீஸ்கர் என ஒவ்வொரு மாநிலமாக அவன் இடத்தை மாற்றி வந்தான்.
இதனையடுத்து உளவுத் தகவல் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் அவன் ஹைதராபாத்தில் பதுங்கி இருந்தது தெரிந்தது. இதனையடுத்து 2,500 கி.மீ.,தூரம் ஓய்வின்றி விரைந்து சென்று அவனை ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து அவன் வேறு இடத்திற்கு தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது.

