ADDED : டிச 09, 2024 12:29 AM

சபரிமலை : சாலக்கயம் முதல் பம்பை வழியாக சபரிமலை சன்னிதானம் வரை 258 சி. சி. டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பு, கூட்டம் கண்காணிப்பு, சமூக விரோத செயல்கள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்த சீசனில் சி.சி.டி.வி. கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் மூலஸ்தான சுற்றுப்பகுதியில் மட்டும் போலீசின் 16, தேவசம் லஞ்ச ஒழிப்பு துறையின் 32 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து கேமராக்களில் பதியும் காட்சிகளை போலீஸ், லஞ்ச ஒழிப்புத்துறை தனித்தனி கட்டுப்பாட்டறையில் இருந்து கண்காணிக்கிறது. மொத்தம் 258 கேமராக்களில் 172 கேமராக்கள் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
கேமராவில் பதியும் காட்சிகளின் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கையை மேற்கொள்வதாக கட்டுப்பாட்டு அறை தனி அதிகாரி பிஜோய் கூறினார். சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடத்துக்கு உடனடியாக போலீசாரை அனுப்ப இது உதவுவதாகவும், சில இடங்களில் பக்தர்கள் தளர்ச்சியுற்று விழும் போது அந்தப் பகுதிக்கு ஸ்டிெரச்சர் அனுப்பவும், மருத்துவ உதவி வழங்கவும், மரம் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்களுக்கு உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாரை அனுப்பவும் உதவியாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.