ADDED : அக் 02, 2024 10:01 PM

மஹிபால்பூர்:டில்லி விமான நிலையத்தில் பெண் பயணியரிடம் இருந்து 26 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஹாங்காங்கில் இருந்து டில்லிக்கு ஐபோன்கள் கடத்தப்படுவதாக புதுடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறையினரை புலனாய்வு துறையினர் எச்சரித்திருந்தனர். அதன் அடிப்படையில் விமான பயணியரை சுங்கத்துறையினர் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தி வந்தனர்.
அந்த வகையில் ஹாங்காங்கில் இருந்து வந்த ஒரு பெண்ணை சோதனைக்கு உட்படுத்தியபோது, அவரது கைப்பையில் 26 ஐபோன்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
டிஷ்யூ பேப்பர்களால் ஐபோன்கள் நன்கு சுற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் 26 போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த போன்களின் மதிப்பு 37 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பயணியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

