மூன்று ஆண்டுகளில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 27 குற்றவாளிகள்; ஹரியானா சிறப்பு அதிரடி படை போலீஸ் நடவடிக்கை
மூன்று ஆண்டுகளில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 27 குற்றவாளிகள்; ஹரியானா சிறப்பு அதிரடி படை போலீஸ் நடவடிக்கை
UPDATED : செப் 12, 2026 07:19 PM
ADDED : செப் 12, 2026 06:43 PM

சண்டிகர்: நாட்டில் குற்றங்களை செய்து, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய, 27 பேரை மூன்று ஆண்டுகளில் ஹரியானா சிறப்பு அதிரடி படை போலீசார் நாடு கடத்தி உள்ளனர். இன்னும் பலரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
நாட்டில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை மூன்று ஆண்டுகளாக ஹரியானா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடி படையினர், வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் வலைப்பின்னல்களை குறிவைத்து தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இதன் விளைவாக, 2023 முதல் இதுவரை, 27 குற்றவாளிகள் நம் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
இது குறித்து, ஹரியானா ஐ.ஜி., சதீஷ் பாலன் கூறியதாவது:
கடந்த 2023 முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம், இதுவரை, 27 குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். 2024 வரை ஐந்து பேரும், 2025ல் ஏழு பேரும், இந்த ஆண்டு மட்டும் இதுவரை, 14 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 4ல், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து முக்கிய குற்றவாளி ஒருவர் நம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
இதற்காக, 2023 முதல், 144 'லுக் அவுட்' எனப்படும் குற்றவாளிகளை தேடப்படும் நோட்டீஸ், 54 'ரெட் கார்னர்' எனப்படும், சர்வதேச அளவில் தேடப்படும் நோட்டீஸ், 53 இன்டர்போல் குறிப்புகள் வெளியிடப்பட்டு தேடும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. மேலும், 93 பாஸ்போர்ட்கள் ரத்து செய்யப்பட்டன. 9 தற்காலிக கைது கோரிக்கைகள், 16 குற்றவாளி ஒப்படைப்பு கோரிக்கைகள் அனுப்பப்பட்டன.
வெளிநாடுகளில் உள்ள, 12 குற்றவாளிகளை அங்கேயே சிறை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடைமுறைகள் துவங்கப்பட்டு உள்ளன. விரைவில் அவர்களும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவர். வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் நான்கு குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு, 9 லட்சம் ரூபாய் வெகுமதி அளிப்பதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க, குற்றவியல் வலைப்பின்னல்களுடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் கிரிப்டோகரன்சி வழித்தடங்கள் ஆகியவற்றையும் சிறப்பு அதிரடி படை கண்காணித்து வருவதாக ஹரியானா போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை கைது செய்ய பஞ்சாப், ராஜஸ்தான், டில்லி, உத்தர பிரதேச மாநில போலீசாருடன் இணைந்து செயல்படும் ஒருங்கிணைந்த அமைப்பையும் ஹரியானா போலீஸ் உருவாக்கி உள்ளது.
ஐரோப்பாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் குற்றவாளி
ஐரோப்பிய நாடான மால்டோவாவில் இருந்து, ஜக்குபுகவான் புரியா கும்பலைச் சேர்ந்த நபரை பஞ்சாப் போலீசார் நம் நாட்டுக்கு நாடு கடத்தியுள்ளனர். 'ஆப்பரேஷன் ஈஸ்டர்ன் ரீச்' என்ற பெயரில் ஆறு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச தேடுதல் வேட்டைக்கு பின், அம்ரித்பால் சிங் என்பவர் நம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். ஐரோப்பாவில் இருந்து பஞ்சாப் போலீசாரால் முதலில் நாடு கடத்தப்பட்ட நபர் இவர். கொலை, கொலை முயற்சி, போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன.
