செயற்கை கருத்தரித்தல் முறையில் பிறந்தது ‘பத்ரி’ இளங்கன்று
செயற்கை கருத்தரித்தல் முறையில் பிறந்தது ‘பத்ரி’ இளங்கன்று
ADDED : செப் 12, 2026 07:13 PM

புதுடில்லி: உத்தரகண்டைச் சேர்ந்த பாரம்பரிய, ‘பத்ரி’ மாட்டு இனத்தை பாதுகாக்கும் வகையில், செயற்கை கருத்தரித்தல் முறையில், அதே இனத்தைச் சேர்ந்த பெண் கன்றுக்குட்டி பிறந்துள்ளது.
உத்தரகண்டைச் சேர்ந்த பாரம்பரிய மாட்டு இனம் பத்ரி. மலைப்பாங்கான நிலப்பரப்பிற்கு ஏற்ப, சிறிய மற்றும் உறுதியான உடலமைப்பு கொண்ட இந்த மாடுகள், உத்தரகண்டின் மாநில விலங்காக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. இமயமலைப் பகுதியில் உள்ள மூலிகைகளை மேய்வதால், இவற்றின் பால் மற்றும் நெய் அதிக மருத்துவ குணம் கொண்டவையாக கருதப்படுகின்றன.
பத்ரி இன மாடுகள் அழிந்து வரும் சூழலில், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க விஞ்ஞானிகளின் ஆலோசனையை உத்தரகண்ட் அரசு நாடியது. அவர்களின் ஆலோசனைப்படி, ஐ.வி.எப்., எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறையில், பத்ரி இன மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
கர்னாலில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பந்த் நகரில் உள்ள ஜி.பி.பந்த் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலை ஆகியவை இணைந்து, இதற்கான முயற்சியை, 2023ல் முன்னெடுத்தன. இதற்கு உத்தரகண்ட் உயிரி தொழில்நுட்பத் துறை கவுன்சில் நிதியுதவி வழங்கியது.
இந்நிலையில், செயற்கை கருத்தரித்தல் முறையில் பத்ரி இனத்தைச் சேர்ந்த பெண் கன்றுக்குட்டி, பந்த் நகர் பல்கலையின் பண்ணையில் நேற்று முன்தினம் பிறந்தது. இது குறித்து, வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
தேர்ந்தெடுக்கப்பட்ட பத்ரி இன பசுக்களிடம் இருந்து, ‘அண்ட செல்’கள் சேகரிக்கப்பட்டன. பின், உத்தரகண்ட் கால்நடை மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட பத்ரி இன காளையின் விந்தணுவை கொண்டு ஆய்வகத்தில் அவை கருத்தரிக்க செய்யப்பட்டன.
இதன் மூலம் உருவான கருக்கள், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்த பின், வாடகை தாயாக செயல்பட்ட, ‘சாஹிவால்’ இனப் பசுவின் கருப்பையில் பொருத்தப்பட்டது. முடிவில், பந்த் நகர் பல்கலையில் உள்ள பண்ணையில் அழகான பத்ரி இன பெண் இளங்கன்று பிறந்தது. இது, எதிர்காலத்தில் விரிவான இன மேம்பாட்டு திட்டங்களுக்கு அடித்தளமாக அமையும். அடுத்த ஒரு வாரத்தில், மற்றொரு பத்ரி கன்று பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
