இடுக்கி அணையை இரண்டு மாதத்தில் 27,700 பயணிகள் ரசிப்பு
இடுக்கி அணையை இரண்டு மாதத்தில் 27,700 பயணிகள் ரசிப்பு
ADDED : அக் 30, 2025 03:44 AM

மூணாறு:  இடுக்கி அணையை இரண்டு மாதங்களில் 27,700 சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பலத்த பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டது. ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, கோடை சீசன்  ஆகிய நாட்களில் மட்டும் அணையை பார்க்க சுற்றுலா பயணிகள்  அனுமதிக்கப்படுகின்றனர்.
அதன்படி  ஓணம் பண்டிகையையொட்டி செப்.,1 முதல் பயணிகள் அணையை பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். செப்.,30 வரை அனுமதி அளிக்க முதலில் முடிவு செய்யப்பட்டபோதும், பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு நீடிக்கப்பட்டுள்ளது.
செப்.,1 முதல் அக்.,24 வரை 2640 சிறுவர்கள் உட்பட 27,700 பயணிகள் அணையை பார்த்து ரசித்தனர்.
தற்போது பாதுகாப்பு கருதி அணையில் நடந்து செல்ல அனுமதி இல்லாததால் மின்வாரியத்தின் ஹைடல் டூரிசம் சார்பில் இயக்கப்படும் பேட்டரி கார்களில் பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். நுழைவு கட்டணம் உட்பட ஒரு நபருக்கு ரூ.150, சிறுவர்களுக்கு ரூ.100.
www.keralahydeltourism.com என்ற இணைய தளம் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும். அதனை  பொறுத்து நேரடியாக நுழைவு சீட்டு வழங்கப்படுவதாக ஹைடல் டூரிசம் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அணையை சுற்றி அவ்வப்போது மேகக்கூட்டம் சூழ்ந்து  ரம்மியமாக காட்சி அளிப்பதால் பயணிகள் குதுாகலம் அடைகின்றனர்.

