காசிரங்கா தேசிய பூங்காவில் 283 பூச்சி இனங்கள் பதிவு
காசிரங்கா தேசிய பூங்காவில் 283 பூச்சி இனங்கள் பதிவு
ADDED : செப் 28, 2025 07:07 AM

குவஹாத்தி : அசா ம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் அதே நிலப்பரப்பில் இயற்கையாக தோன்றி வாழ்ந்து வரும் 283 பூச்சியினங்களை கண்டறியப்பட்டு உள்ளன .
வடகிழக்கு மாநிலமான அசாமின், காசிரங்காவில் 1,000 சதுர கிலோ மீட்டர் பரப்பில் தேசிய பூங்கா அமைந்துள்ளது.
இது புல்வெளி, சதுப்பு நிலங்கள், ஆறு மற்றும் காடுகள் கலந்து காணப்படும் இயற்கை அமைப்பு.
இங்கு உள்ள பான்பாரி காப்பு காட்டில், கார்பெட் அறக்கட்டளை என்ற அமைப்பின் பூச்சியியல் ஆய்வாளர்கள், காட்டுப்பகுதியில் வாழும் பூச்சிகள் குறித்து ஆய்வு நடத்தினர்; அதன் முடிவுகளை நேற்று வெளியிட்டனர்.
இதில் காசிரங்கா தேசிய பூங்கா பகுதியிலேயே தோன்றி, அங்கேயே பல நுாற்றாண்டுகளாக வாழும் 283 வகை பூச்சி இனங்களை பதிவு செய்துள்ளனர். அதில் 29 இனங்கள் சிலந்திகள், 85 இனங்கள் வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள், 35 இனங்கள் புற்றுப்பூச்சிகள்.
ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காசிரங்காவில் உருவாகி சுற்றித்திரியும் 283 பூச்சி மற்றும் சிலந்தி இனங்களை கண்டறிந்தோம். இவை காசிரங்காவின் பிரமிக்க வைக்கும் பல்லுயிர் தன்மையை காட்டுகிறது.
விதை பரவல், மண் ஆரோக்கியம், தாவர இனப்பெருக்கம் ஆகியவற்றுக்கு இந்த பூச்சிகள், சிலந்திகள் இன்றியமையாதவை. இவையே காசிரங்காவின் புகழ்பெற்ற விலங்குகளை தாங்கும் உணவுச் சங்கிலியின் அடித்தளமாக செயல்படுகின்றன. எனவே, இந்த பூச்சிகளை பாதுகாக்க காலநிலை மாற்றத்தை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.