பாக்., உடன் தொடர்பில் இருந்தாரா லடாக் சமூக ஆர்வலர் வான்சுக்?
பாக்., உடன் தொடர்பில் இருந்தாரா லடாக் சமூக ஆர்வலர் வான்சுக்?
ADDED : செப் 28, 2025 07:24 AM

லே: லடாக் மாநில அந்தஸ்துக்கு போராடி கைது செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்குக்கு, பாகிஸ்தான் உளவாளி உடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக், தற்போது சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக உள்ளது. இந்நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, கல்வியாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக், கடந்த 10ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார்.
வன்முறை இதன் ஒரு பகுதியாக, 24ம் தேதி நடந்த முழு அடைப்பு போராட்டம் வன்முறையில் முடிந்தது.
லேவில், ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் பா.ஜ., அலுவலகத்தை தீவைத்து கொளுத்தினர். கடைகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் பலியாகினர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை வாங்சுக் முடித்துக் கொண்டார்.
லடாக் வன்முறைக்கு, வாங்சுக்கின் பேச்சே காரணம் என குற்றஞ்சாட்டிய மத்திய அரசு, அவரின் நிறுவனத்தின் வெளிநாட்டு நிதிக்கான அனுமதியை ரத்து செய்தது.
இதையடுத்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வாங்சுக், ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர் அங்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
வாங்சுக்கிடம், லடாக் போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவாளியுடன் வாங்சுக் தொடர்பில் இருந்தது குறித்த வி சாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கைது
இது குறித்து லடாக் டி.ஜி.பி., சிங் ஜம்வால் நேற்று கூறியதாவது:
லேவில் நடந்த வன்முறை சம்பவத்தின் பின்னணியில் வாங்சுக் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. லடாக் விவகாரத்தில் மத்திய அரசுடன் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்ட பிறகும் உண்ணாவிரதத்தை அவர் கைவிடவில்லை. அதேபோல், கடந்த பிப்ரவரியில் அவர் பாக்., சென்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
வங்கதேசத்துக்கும் வாங்சுக் பயணித்துள்ளார். இந்த பயணம் மற்றும் அங்கு அவரின் நிகழ்ச்சி நிரல் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், பாக்.,கைச் சேர்ந்த உளவுத் துறை அதிகாரி ஒருவரை நாங்கள் கைது செய்தோம். அவருடன் வாங்சுக் தொடர்பில் இருந்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.