ADDED : அக் 04, 2025 02:22 AM

ஆக்ரா:துர்கா பூஜை முடிந்து ஆற்றில் சிலைகளை கரைக்கும் போது, ஒன்பது பேர் நீரில் மூழ்கிய நிலையில், மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
வடமாநிலங்களில் வெகு விமரிசையாக துர்கா பூஜை கொண்டாடப்பட்டு, துர்கா சிலைகள் ஆறு, ஏரி மற்றும் குளங்களில் கரைக்கப்பட்டன.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா யமுனை ஆற்றில் நேற்று முன் தினம் பலர் துர்கா சிலைகளை கரைத்தனர். அப்போது, ஆழமான பகுதிக்குள் சென்ற ஒன்பது நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து போலீஸ் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் வந்து தேடுதல் வேட்டை நடத்தினர். ககன், 26, ஓம்பால், 32, மற்றும் பகவதி, 20, ஆகிய மூவரும் உயிரிழந்த நிலையில் நேற்று பிற்பகலில் மீட்கப்பட்டனர். மூன்று உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆக்ரா கலெக்டர் அரவிந்த் மல்லப்பா பங்காரி கூறுகையில், “மேலும் ஆறு பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினருடன் உள்ளூர் நீச்சல் வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்,”என்றார்.
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.