ADDED : நவ 04, 2024 09:59 PM

பல்லாரி; இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் பணப்பட்டுவாடா மட்டுமின்றி பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்குவதும் ஜரூராக நடக்கிறது.
லேட்டஸ்டாக சண்டூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட 27 லட்சம் ரூபாயை, தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டணா; பல்லாரி மாவட்டம், சண்டூர்; ஹாவேரி மாவட்டம் ஷிகாவி ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
எனவே தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர். தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து, வாகனங்களை சோதனையிடுகின்றனர்.
ஆனால் அதிகாரிகளின் கண்களை மறைத்து, அரசியல் கட்சிகளின் தொண்டர்கள், இரவோடு இரவாக வாக்காளர்களுக்கு, பணம், பரிசுப்பொருள், மதுபானம் வினியோகிக்கின்றனர். கிப்ட் கூப்பன்களும் வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று தொகுதிகளிலும், இதுவரை லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, சென்னப்பட்டணாவின், பீமேனஹள்ளியில் உள்ள குடோனில், வாக்காளர்களுக்கு வினியோகிக்க பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சேலைகள், வேட்டிகள், சட்டைகள், ரெடிமேட் உடைகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று காலை சண்டூரின் டி.பசாபுரா கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் தேர்தல் அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக சென்ற காரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், சோதனை நடத்தியபோது 27.50 லட்சம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் இருந்தவர்களிடம், அதற்குரிய ஆவணங்கள் இல்லை. எனவே அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தொகை, 10 லட்ச ரூபாய்க்குள் இருந்தால், அதை தங்கள் வசமே தேர்தல் அதிகாரிகள் வைத்திருக்கலாம். 10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
எனவே சண்டூரில் கைப்பற்றிய 27.50 லட்சம் ரூபாயை, வருமான வரித்துறையிடம் தேர்தல் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இந்த பணம் எங்கிருந்து, யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என, விசாரணை நடந்து வருகிறது.