தமிழகத்துக்கு 3 கோடி ஸ்மார்ட் மின் மீட்டர் ஒதுக்கீடு: ராஜ்யசபாவில் அமைச்சர் தகவல்
தமிழகத்துக்கு 3 கோடி ஸ்மார்ட் மின் மீட்டர் ஒதுக்கீடு: ராஜ்யசபாவில் அமைச்சர் தகவல்
ADDED : டிச 17, 2024 07:16 AM

புதுடில்லி; தமிழகத்துக்கு 3 கோடி ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று ராஜ்யசபாவில் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறி உள்ளார்.
இதுகுறித்து ராஜ்ய சபாவில் கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில் விவரம் வருமாறு;நாடு முழுவதும் 2025ம் ஆண்டுக்குள் 25 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, கடந்த நவ.29ம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் 73 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக 19.79 கோடி மீட்டர்கள் பொருத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு மட்டும் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. திரிபுராவில் 5.47 லட்சம், ராஜஸ்தான் 1.42 கோடி, பஞ்சாப் 87.84 லட்சம் மீட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் இந்த மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மீட்டர்கள் இதுவரை பொருத்தப்படவில்லை.
இதேபோன்று நாகலாந்து (3.17 லட்சம்), மேகாலயா (4.60 லட்சம்), மிசோரம் (2.89 லட்சம்) ஜார்க்கண்ட் (13.41 லட்சம்), கேரளா (1.32 கோடி), அருணாச்சலபிரதேசம் (2.87லட்சம்), கோவா (7.41லட்சம்) மின் மீட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன.
தமிழகம், திரிபுரா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்று இந்த மாநிலங்களில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் வீடுகளில் பொருத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.